மதுரை,
மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது பிறந்த நாளில் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர். அப்போது பா.ஜ.க.வினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.க. தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, அது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் நேற்று மதுரை வந்தார். அவர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
அம்பேத்கர் பிறந்த நாளுக்கு மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அம்பேத்கரை ஒரு சாதி தலைவராக அடையாளப்படுத்த முயற்சி நடக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அம்பேத்கரை பெருமைப்படுத்தியுள்ளது. அம்பேத்கர் ஒரு தேசிய தலைவர், ஒரு சாதி தலைவர் அல்ல. அம்பேத்கர் புகழை பா.ஜ.க. உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறது. மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ஜ.க.வினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டனர். இதனால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். அரக்கோணத்தில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அரக்கோணம் விவகாரத்தை சாதிய பிரச்சினையாக மாற்ற தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் முயற்சிக்கின்றன. திருமாவளவன் அடிப்படை அரசியலை இழந்து சாதி அரசியலை கையில் எடுத்துள்ளார். பா.ஜ.க.வினர் அமைதியானவர்கள். அதனால்தான் அன்று நடந்த சம்பவத்தில் கூட அமைதியாக இருந்தார்கள். திருமாவளவன் தன் கட்சியினரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கண்டித்து எல்.முருகன் தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.