சேலம்,
பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையை கண்டித்தும், இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நேற்று சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு சேலம் மாவட்ட தமிழ் தேச மக்கள் முன்னணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
அரசியல் தலைமை குழு உறுப்பினர் விநாயகம், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பயங்கரவாத சட்ட திருத்தம் தவறு என்று நாடாளுமன்றத்தில் பேசியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. பா.ஜனதா கட்சி கொண்டு வரும் அனைத்தும் சட்ட விரோதமான சட்டங்கள் ஆகும். குறிப்பாக வேளாண் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி 3 மாதமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டத்தை தூக்கி எறிய கூடிய ஆற்றல் மக்கள் மன்றத்திற்கு உண்டு என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது. புதுச்சேரியில் மத்திய பா.ஜனதாவினால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது.
இன்னும் 2 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. அதற்குள் புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க என்ன காரணம்? கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொல்லைப்புறமாக பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. அடுத்து நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது. அதை கவிழ்ப்பதற்கான ஒத்திகை நடவடிக்கையாக புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செஞ்சோற்று கடனுக்காக சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு நாளைக்கு நாங்களும் கோட்டையில் அமரும் நாள் வரும். ஜனநாயகத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நேர்மையாக மக்களை வாக்கு அளிக்க விட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்ட முடிவில் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ஆட்சியை கைப்பற்றினாலும், இந்த ஆட்சியை எங்களால் எதுவும் செய்ய முடியும் என்று அச்சுறுத்தும் வகையில் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பில் பா.ஜனதா கட்சி ஈடுபட்டு உள்ளது. இந்த சதி தமிழகத்தில் எடுபடாது.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த வித அடிப்படை வசதியும் செய்ய வில்லை. கிராமப்புறங்களில் குடிநீர் வசதி இல்லை. சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லை. சாலைகளை மேம்படுத்தவில்லை. தேர்தல் நெருங்குவதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவிக்கிறார். இது அவர்களது இயலாமையை காட்டுகிறது.
விவசாயக்கடன் தள்ளுபடியை விவசாயிகள், பொதுமக்கள் கவனித்துக்கொண்டு தான் உள்ளார்கள். முதல்-அமைச்சரின் அறிவிப்புகள் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்காது. பயங்கரவாத சட்டத்தை திரும்ப பெற்று, அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ள பாலன், சீனிவாசன் உள்பட 4 பேரை விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.