கம்பம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மற்றும் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் பஞ்சுராஜா, கம்பம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மணிமாறன் மற்றும் மீன் ஆய்வாளர் கொண்ட குழுவினர் கம்பம் ஓடைக்கரைத் தெரு பகுதியில் நேற்று அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது கெட்டுப்போன மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா?, ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சில கடைகளில் மொத்தம் 10 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இதைத்தொடர்ந்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மீன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.