தமிழக செய்திகள்

திருச்சியில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: பேராசிரியையை ஆம்புலன்சில் கடத்திய அ.தி.மு.க. பிரமுகர்

திருச்சியில் கல்லூரி பேராசிரியையை ஆம்புலன்ஸ் வேனில் அ.தி.மு.க. பிரமுகர் கடத்தி சென்றார். போலீசார் விரட்டியதால் நடுவழியில் இறக்கி விட்டு தப்பினார்.

மலைக்கோட்டை,

திருச்சியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியை சேர்ந்தவர் ஜோதிபெரியசாமி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி நாகலெட்சுமி. இவர்களது மகள் மகாலெட்சுமி (வயது 32). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

அவருடன் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஹேமாவும் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் தினமும் மலைக்கோட்டை வடக்கு வீதியில் இருந்து மொபட்டில் கல்லூரிக்கு சென்று வந்தனர். நேற்று காலை வழக்கம்போல் அவர்கள் கல்லூரிக்கு புறப்பட தயாரானார்கள்.

ஆனால் மொபட்டின் டயர் பஞ்சரானதால் அதை வீட்டிலேயே நிறுத்திவிட்டு நடந்து கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தனர். வடக்கு ஆண்டாள் வீதி வழியாக சென்றபோது, அங்கு திடீரென ஆம்புலன்ஸ் வேனில் வந்த ஒரு கும்பல் மகாலெட்சுமியின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக அவரை வேனில் ஏற்றினர்.

இதனை கண்ட ஹேமா அதிர்ச்சி அடைந்து மகாலெட்சுமியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு மகாலெட்சுமியை கடத்தி கொண்டு மின்னல்வேகத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த ஹேமா உடனடியாக இதுகுறித்து மகாலெட்சுமியின் தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த அவர், உறவினர்களுடன் கோட்டை போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். இதையடுத்து உஷாரான போலீசார் மகாலெட்சுமியை கடத்தி சென்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். மாநகர் முழுவதும் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே மகாலெட்சுமியை கடத்தி சென்ற ஆம்புலன்ஸ் திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலையை தாண்டி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் ஜீப்பில் மகாலெட்சுமியை கடத்தி சென்ற ஆம்புலன்சை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். அப்போது போலீசார் விரட்டி வருவதை அறிந்த கடத்தல் கும்பல் போலீசாருக்கு பயந்து துவரங்குறிச்சியில் நடுவழியில் மகாலெட்சுமியை இறக்கி விட்டு தப்பி சென்றனர். அங்கிருந்து அவர் தனது தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறி திருச்சிக்கு புறப்பட்டார். இதுகுறித்து மகாலெட்சுமியின் தாய் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

விராலிமலை சுங்கச்சாவடி அருகே வந்தபோது, போலீசார் பஸ்சை நிறுத்தி மகாலெட்சுமியை மீட்டு தங்கள் வாகனத்தில் ஏற்றி திருச்சிக்கு அழைத்து வந்தனர். மகாலெட்சுமியை கடத்தி சென்ற மர்ம நபர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவரை கடத்தியது திருச்சி மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. பொருளாளரான சோமசுந்தரம் என்ற வணக்கம் சோமுவும் (38), அவரது ஆதரவாளர்களும் என தெரியவந்தது. வணக்கம் சோமுவிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த அவர், மகாலெட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

அவ்வப்போது மகாலெட்சுமி செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலெட்சுமியின் உறவினர்கள் சோமுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது அவர் இனிமேல் மகாலெட்சுமியை தொந்தரவு செய்யமாட்டேன் என்று கூறி உள்ளார். மகாலெட்சுமியை கட்டாய திருமணம் செய்யும் நோக்கத்தில் வணக்கம் சோமு கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மகாலெட்சுமி போலீசாரிடம் கூறும்போது, ஆம்புலன்ஸ் வேனில் என்னை கடத்தி சென்றபோது, சத்தம் போட்டால் முகத்தில் மயக்க மருந்தை (குளோரோபாம்) தெளித்து விடுவேன் என்று மிரட்டினார்கள். அதனால் என்னால் சத்தம் போட முடியவில்லை. மேலும் கட்டாய தாலிகட்டவும் முயற்சித்தனர் என்று கூறி உள்ளார்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மகாலெட்சுமியின் தாய் நாகலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், வணக்கம் சோமு உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்ற அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சியில் சினிமா பாணியில் கல்லூரி பேராசிரியையை அ.தி.மு.க. பிரமுகர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாலெட்சுமியை ஆம்புலன்ஸ் வேனில் கடத்தியபோது அங்கு ஆட்டோ ஸ்டாண்டில் நின்ற ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வேனின் கதவை பிடித்து இழுத்து நிறுத்த முயற்சித்தார். ஆனால் அந்த வேன் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. உடனே ஜெயக்குமார் இருசக்கர வாகனத்தில் ஏறி ஆம்புலன்ஸை விரட்டி சென்றார். அவருடன் மேலும் சில ஆட்டோ டிரைவர்களும் விரட்டினர். அவர்கள் காவிரி பாலம் வரை சென்றும் ஆம்புலன்ஸை பிடிக்க முடியாததால் திரும்பி வந்து விட்டனர்.

இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், கடந்த சில நாட்களாக அந்த ஆம்புலன்ஸ் அதே பகுதிக்கு வந்து சிறிதுநேரம் நின்றுள்ளது. இதனால் எங்களுக்கு முதலில் சந்தேகம் வரவில்லை. இன்று (நேற்று) காலை திடீரென அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றியதை கண்டதும் தான் உஷார் அடைந்து விரட்டி சென்றோம். ஆனாலும் பிடிக்க முடியவில்லை என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்