சென்னை,
நடிகை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே. பாலபாரதி தெரிவித்துள்ளார்.
முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்து பேசியபோது, நடிகை ஒருவரை குறிப்பிட்டு சி.வி. சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.வி. சண்முகம் பேசியதாவது, ‘அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். மு.க.ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்கிறார். எனக்கு ஒரு நடிகை(நடிகையின் பெயரை குறிப்பிட்டு) வேணும் இவர் நிறைவேற்றுவாரா. நடிகையை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று கேட்பார்கள் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?’ என்றார்.
இந்நிலையில், இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே. பாலபாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சி.வி. சண்முகம் தேர்தலில் நிற்பதற்கான உரிமையை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்றும், இது பெண்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறினார். மேலும், இதற்கு தமிழ்நாட்டு பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் கேட்டநிலையில் அதற்கு திமுக இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.