சென்னை,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வருகிற 2022-ம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த திட்டத்திற்காக இந்திய விமானப்படையில் இருந்து 25 விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த 4 பேருக்கும் ரஷியாவில் காகரினில் உள்ள காஸ்மோனட் பயிற்சி மையத்தில் கடந்தபிப்ரவரி 10-ந்தேதி பயிற்சி தொடங்கியது.
ஒடிசா மாநில விமானப்படையை சேர்ந்த கமாண்டரான நிகில் ராத் உள்ளிட்ட 4 விமானிகளும் முதல் கட்ட பயிற்சியை முடித்து உள்ளனர். இவர்கள், எல்லா சூழல்களிலும், அனைத்து நிலப்பரப்பு பகுதிகளிலும் குழு நடவடிக்கைகளாக செயல்படுவது குறித்த பயிற்சியை முடித்துள்ளனர்.
மேலும் கொரோனா நடைமுறைகளை பின்பற்றி கோடைகாலம், குளிர்காலத்தில் மரக்கட்டைகளால் ஆன பகுதி, சதுப்பு நில பகுதி, நீர் மேற்பரப்பு, புல்வெளிகளில் தரையிறங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 4 விமானிகளும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், மேலும் பயிற்சியை தொடர உறுதியாக உள்ளதாகவும் அவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.