சென்னை,
குரங்கணி காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி, அங்கு மலையேற்றம் சென்ற 11 பேர் உயிரிழந்தனர்.
குரங்கணி மலைப்பகுதியில் வனத்துறையின் அனுமதியின்றி அவர்கள் மலையேற்றம் சென்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். மேலும், காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் அனுமதியின்றி அங்கு மலையேற்றம் செல்ல காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக விசாரிக்க வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், குரங்கணியில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம், மலையேற்றம் செல்வதற்காக வனத்துறை வகுத்துள்ள விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளதா, மலையேற்றம் செல்ல ஏற்பாடு செய்தவர்கள் ஏதேனும் விதிமுறைகளை மீறியுள்ளனரா என்பது குறித்து விசாரணை அதிகாரி விசாரிப்பார்.வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற பரிந்துரைகளையும் அவர் இரண்டு மாத காலத்திற்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.