தமிழக செய்திகள்

பஞ்சாப்பில் மோடி பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு: பட்டினப்பாக்கத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா

பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து சென்னையில் நேற்று தர்ணா போராட்டம் நடத்திய பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை,

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்தும், உடனடியாக அம்மாநில முதல்-மந்திரி பதவி விலக வலியுறுத்தியும் நேற்று சென்னையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு, சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலையில் தர்ணா

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி, வி.பி.துரைசாமி தலைமையில் பா.ஜ.கவினர் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு அமைதி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தியதால் கராத்தே தியாகராஜனுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என போலீசார் மறுத்தபோது பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டன. சட்டசபை முடிந்து தர்ணா போராட்டம் நடைபெறுவதை கேள்விப்பட்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நைனார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி ஆகியோரும் உடனடியாக அங்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

தலைவர்கள் கைது

அதையடுத்து இணை கமிஷனர் தலைமையிலான போலீசார் சுமார் 1 மணி நேரம், தர்ணாவில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சமாதானம் ஏற்படாததால், தலைவர்கள் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு கூறியதாவது:-

பிரதமர் மோடி செல்லும் வழி பற்றி தெரியவில்லை என பஞ்சாப் முதல்-மந்திரி கூறுகிறார். இது பொய்யான சாக்கு. பிரதமரை கட்சிக்கு அப்பாற்பட்டுத்தான் பார்க்க வேண்டும். ஆட்சி கையில் வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கிப்போக காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்பது தெரிகிறது. இந்த சம்பவத்துக்கு சோனியா காந்தி நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பஞ்சாப் முதல்-மந்திரி...

பஞ்சாப் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கொரோனா பரவல் காரணமாக பிரதமர் தமிழகம் வரவில்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் பாதுகாப்பு குறைபாடுக்கு கண்டன அறிக்கை விடவில்லை. நாளை ஸ்டாலினுக்கு ஒரு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் குரல் கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலாப்பூரில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது