சென்னை,
கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினருக்கு சென்னை அடையாறில் சில சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களில் ஒரு பகுதியை கடந்த 1994-ம் ஆண்டு சிங்காரவேலன் என்பவருக்கு அவர்கள் விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையில் அதே நிலத்தை வேறு ஒரு நபருக்கு போலி ஆவணங்கள் மூலம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிங்காரவேலன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராகும்படி திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் மற்றும் அந்த நிலத்தை வாங்கியவர்கள் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.