கன்னியாகுமரி,
தமிழகத்தில் ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன் புதிய கட்சி தொடங்குவேன் என கூறினார்.
அதன்படி, கடந்த மார்ச் 15ந்தேதி மதுரை மேலூரில் நடைபெற்ற விழாவில் தினகரன் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். தனது கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார்.
கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார் டிடிவி தினகரன்.
இந்த நிலையில், டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து நான் விலகி விட்டேன் என நாஞ்சில் சம்பத் இன்று கன்னியாகுமரியில் அறிவித்துள்ளார்.
அவர், நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என டி.டி.வி. தினகரன் நினைக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.
அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன். அரசியலில் இனி நான் இல்லை. தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை காணலாம் என கூறியுள்ளார்.