சத்தியமங்கலம்,
நாமக்கல்லில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த கோவிந்தராஜன் ஓட்டிவந்தார். கிளீனர் ரித்தீஷ் உடன் இருந்தார்.
லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் மீது மோதி ஏறி நின்றது. இதில் லாரியின் டீசல் டேங்க், முகப்புப் பகுதி சேதமடைந்தது. லாரி கவிழாமல் அப்படியே நின்றது.
இதனால் டிரைவர், கிளீனர் காயமின்றி தப்பினார்கள். மோதிய வேகத்தில் சில முட்டைகள் ரோட்டில் சரிந்து விழுந்து உடைந்தன. ஆயிரக்கணக்கான முட்டைகள் உடையாமல் தப்பியது.விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.