தமிழக செய்திகள்

சென்னையில் சந்திர கிரகணம் தெரிந்தது; பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு

சென்னையில் நேற்று சந்திர கிரகணம் தெரிந்தது. இதை பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #Chennai

தினத்தந்தி

சென்னை,

சூரியன், பூமி மற்றும் சந்திரன் இவை 3ம் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை சந்திர கிரகணம் என்கின்றனர். நேற்று சந்திர கிரகணம் ஏற்பட்டது. சென்னையில் பகுதி சந்திர கிரகணம் தெரிந்தது. இதை பொதுமக்கள் பார்த்தனர்.

சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்காக தென்சென்னை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் கடற்கரையில் தொலைநோக்கி கருவிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள், மாணவர்கள் அபூர்வ சந்திர கிரகணத்தை பார்வையிட்டனர்.

இதுகுறித்து அறிவியல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் உதயன் கூறியதாவது:

அபூர்வ சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்காக ஒரு தொலைநோக்கியும், 2 பைனாகுலரும் கொண்டுவரப்பட்டு இருந்தது. இதன் மூலம் சந்திர கிரகணத்தை பார்வையிட பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஆவலுடன் வந்தனர். மாலை 6.21 மணி முதல் இரவு 7.40 மணி வரை முழு சந்திர கிரகண நேரத்தில் மேக மூட்டமாக இருந்ததால் சரியாக பார்க்க முடியவில்லை. இரவு 7.40 மணி முதல் இரவு 9.40 மணி வரை பகுதி சந்திர கிரகணத்தை பார்க்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கு விஞ்ஞானி டி.ஆர்.கோவிந்தராஜ் மற்றும் அறிவியல் இயக்கத்தை சேர்ந்த ரவிகுமார் உள்பட பலர் விளக்கம் அளித்தனர்.

இதேபோல் சந்திர கிரகணத்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக பிர்லா கோளரங்கத்தில் 6 தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டிருந்தன. திரளான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சந்திர கிரகணத்தை பார்வையிட்டனர். அவர்களுக்கு பிர்லா கோளரங்க விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக விளக்கம் அளித்தனர்.

சந்திர கிரகணத்தை பார்வையிட பிர்லா கோளரங்கத்தில் மாலை 5.30 மணி அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். மேக மூட்டம் அதிகமாக இருந்ததால், மாலை 6.50 மணிக்கு பிறகு கிரகணம் தெரிந்தது. ஒவ்வொருவருக்கும் 2 நிமிடம் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. அற்புதமான இந்த நிகழ்வை மகிழ்ச்சியோடு பார்த்தாக வந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:

வானில் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகளை பார்வையிட மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு ஆர்வம் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவர்களின் சந்தேகங்களுக்கு, விஞ்ஞானிகள் மூலம் அறிவியல் சார்ந்த கருத்துகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது