தமிழக செய்திகள்

பழங்குடி இன மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடித்த நீலகிரி கலெக்டருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடித்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

100 சதவீதம் தடுப்பூசி

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்ற வகையில் அதற்கான பணிகளிலும் முழு மூச்சோடு சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை ஈடுபடுகிறது. ஆனால் இந்த தடுப்பூசியை செலுத்துவதில், மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களிடையே ஒருவித அச்சம்

தொற்றி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பல மாநிலங்களில் இந்த பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்பது பெரிய சவாலாக இருந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி, சாதனை படைத்து இருக்கிறார், அந்த மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.

பழங்குடியின மக்கள் மத்தியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதில் இந்தியாவில் முதல் மாவட்டம் என்ற பெருமையையும் இதன் மூலம் பெற்று தந்துள்ளார்.

இன்னசென்ட் திவ்யாவுக்கு பாராட்டு

அவருடைய இந்த பணியை பாராட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழை வழங்கி இருக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் தின விழாவையொட்டி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த பாராட்டு சான்றிதழை, கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம், மு.க.ஸ்டாலின் வழங்கினார்.முதல்-அமைச்சரிடம் இருந்து பாராட்டு சான்றிதழ் பெற்றது குறித்தும், பழங்குடியின மக்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது எப்படி? என்பது குறித்தும் அவர் கூறியதாவது:-

மகிழ்ச்சி

இது தனிப்பட்ட சாதனையாக நான் பார்க்கவில்லை. இது என்னை சார்ந்த குழுவின் முயற்சியின் மூலம் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன். மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நீலகிரி மாவட்டத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் என்னிடம், பழங்குடியின மக்கள் அனைவருக்கும் ஜூன் மாதத்துக்குள் தடுப்பூசி போட்டு முடித்துவிட முடியுமா? என்று கேட்டார். கண்டிப்பாக முடியும் சார். தடுப்பூசி போதுமான அளவுக்கு இருப்பு இருந்தால் போதும் என்று சொன்னேன்.அதன்படி, 14 ஆயிரம் தடுப்பூசிகள் தனியாக அதற்கென்று கொடுத்தார். அதை வைத்து எங்களுடைய குழுவின் முயற்சியால் இதை சாதித்து இருக்கிறோம். அதற்கு கிடைத்த இந்த பாராட்டு எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த தடுப்பூசி குறித்த தேவையற்ற வதந்திகள் பழங்குடியின மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அதையெல்லாம் அவர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு செய்தோம். சில நடிகர்களை கொண்டு மீம்ஸ்' உருவாக்கி அதன்மூலமும் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்தோம்.மேலும், பழங்குடியின மக்களின் பாரம்பரிய மொழியில் பாடல்கள் இசைக்கப்பட்டு தடுப்பூசி குறித்த அச்சத்தை அவர்களிடம் இருந்து போக்கினோம். அவர்கள் யாருக்கும் அழுத்தம் கொடுத்து தடுப்பூசி போடவில்லை. பழங்குடியின தலைவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட்டு, அவர்களை கொண்டு மக்கள் மத்தியில் பேசவைத்துதான் இதை சாதித்து காட்டியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு