சென்னை,
தமிழகத்தில் பஸ் கட்டணம் 20 சதவீதம் முதல் 54.54 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த மாதம் 20-ந் தேதி அமலுக்கு வந்தது. கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து 498 சொகுசு பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டன.
மேலும் சாதாரண பஸ்களில் 60 பைசாவில் இருந்து 58 பைசாவும், விரைவு பஸ்களில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவும், சொகுசு பஸ்களில் 90 பைசாவில் இருந்து 85 பைசாவும், கூடுதல் சொகுசு பஸ்களில் 110 பைசாவில் இருந்து 100 பைசாவும், ஏ.சி.பஸ்களில் 140 பைசாவில் இருந்து 130 பைசாவும் என கிலோ மீட்டருக்கு கட்டணம் குறைக்கப்பட்டது.
பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, பைசா கணக்கில் விலை குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை 1,000 ரூபாயில் இருந்து 1,300 ரூபாயாகவும், சென்னையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள தினசரி பஸ் பாஸ் கட்டணத்தை 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும் உயர்த்துவதற்கு போக்குவரத்து கழகம் உத்தேசித்து இருப்பதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சலுகை விலை பயண அட்டை (பஸ் பாஸ்) வழங்குவதில் சில சிரமங்கள் இருந்தன. தற்போது உள்ள சூழ்நிலையில் ரூ.50 விலையிலான தினசரி டிக்கெட் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால் ரூ.50 பாஸ்களை கலர் ஜெராக்ஸ் எடுப்பது உள்பட நிறைய முறைகேடுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது.
ரூ.1,000 பாஸ்களில் பயணியின் புகைப்படம் இருக்கும். ஆனால் ரூ.50 பாஸ்களில் அது இருக்காது. எனவே பல முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே தான் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே உள்ள ரூ.1,000 பாஸ் அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேவேளையில் ரூ.240 விலையில் வழங்கப்படும் மாத சலுகை பயண அட்டையின் விலை ரூ.320 ஆகவும், ரூ.280 விலையில் வழங்கப்படும் மாதந்திர பயண சலுகை அட்டை ரூ.370 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த 2 கட்டண உயர்வும் உடனடியாக நடைமுறைக்கு வரும்.
50 ரூபாய் உள்பட அனைத்து சீசன் டிக்கெட்கள் விலையை உயர்த்தலாமா? என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பிற போக்குவரத்து கழகங்களில் மாதாந்திர சலுகை அட்டை திட்டத்தில் 20 நாட்களுக்கான கட்டணத்தை செலுத்தி விட்டு மாதம் முழுவதும் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு உள்ளன. அந்த பஸ்கள் இன்னும் 4 மாதத்தில் முழுமையான பயன்பாட்டுக்கு வரும். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே விடுக்கப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் வர இருக்கும் நிதிநிலை அறிக்கையில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பஸ்கள் வாங்குவதற்கான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
போக்குவரத்து துறையில் உள்ள பழைய பஸ்களையும் மாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். அதை பரிசீலனை செய்வதாக அவர் கூறியிருக்கிறார். அதேபோல 200 மின்சார பஸ்கள் வாங்குவதற்கு மத்திய அரசிடம் மானியமாக நிதி கேட்டிருக்கிறோம். அது சம்பந்தமாக நாளை (வியாழக்கிழமை) டெல்லி செல்ல உள்ளோம். அங்கு மின்சார பஸ்கள் நடைமுறை சம்பந்தமான கருத்தரங்கு நடக்கிறது.
சமீபத்தில் சென்னை வந்த மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் கூட, விலை அதிகமாக உள்ள காரணத்தால் மின்சார பஸ்கள் வாங்க நிதி உதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அவரும் சென்னையில் முதற்கட்டமாக 200 மின்சார பஸ்கள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன் இணைந்து மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொள்ள உள்ள பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் தற்போது இ-டிக்கெட் மிஷின் கொண்டு வரப்பட்டு உள்ளது.
குறைவான கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தினமும் ரூ.9 கோடி நஷ்டம் இருந்தது. 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரூ.12 கோடியாக இந்த நஷ்டம் அதிகரித்தது. அதனால் தான் வேறு வழியின்றி கட்டணம் உயர்த்தவேண்டிய அவசியம் உருவானது. முதல்-அமைச்சர் இதற்காக பல மாதங்கள் யோசித்து, பல கட்டங்களாக ஆராய்ந்து தான் இந்த முடிவை கையாண்டார். இப்போதும் கூட ரூ.400 கோடி நஷ்டம் ஏற்பட்டு தான் வருகிறது. எனவே பஸ் கட்டணத்தை மீண்டும் குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை.
மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் தி.மு.க.வும் இருந்தபோதும் டீசலுக்கு இரட்டை விலை கொள்கை கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் அடிக்கடி டீசல் விலை உயர்ந்ததால் போக்குவரத்து துறை பரிதவித்தது. அதனைத் தொடர்ந்து தான் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா ஆண்டுக்கு ரூ.800 கோடியை டீசல் மானியமாக அறிவித்தார். இதுவரை அந்த மானியம் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரக பஸ்கள் தான் அதிகம் இயங்குவதாக ஏழை மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. அதனால் ஒயிட் போர்டு பஸ்களை அதிகப்படுத்தி இருக்கிறோம். அந்தவகையில் சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களை ஒயிட் போர்டு பஸ்களாக மாற்றி இயக்கியிருக்கிறோம். தற்போதும் கூட அதுகுறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். கோரிக்கைகள் வலுக்கும் பட்சத்தில் எக்ஸ்பிரஸ் பஸ்கள் அதிகம் செல்லும் வழித்தடங்களை கண்டறிந்து, அதில் சில பஸ்களில் சாதாரண கட்டணம் என்று ஸ்டிக்கர் ஒட்ட அறிவுறுத்தி இருக்கிறோம்.
போக்குவரத்துத்துறை நஷ்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் கூறும் புள்ளி விவரங்களில் உண்மை இல்லை. அரசுக்கு ஏற்படும் இழப்புகளை அரசே தான் சமாளித்து வருகிறது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விட்டது, பணியில் உள்ளோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது. பற்றாக்குறையை அரசு தான் கொடுத்து வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பஸ்கள் ஓடுகின்றன. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் கட்டணமும் குறைவு. ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்தி இருக்கலாம் என்கிறார்கள். எப்படி உயர்த்தினாலும் மக்கள் மீது தானே அந்த சுமை இருக்கும். அதை மக்கள் தானே கொடுக்க வேண்டும். அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்துக்காக கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 61 ஆயிரத்து 577 பேர் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக போக்குவரத்துத்துறையை சேர்ந்த 44 அதிகாரிகளுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கி பேசும்போது, தற்போது போக்குவரத்து துறையில் சில மாற்றங்களை மேற்கொண்டதின் விளைவாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்து 869 விபத்துகள் குறைந்துள்ளன. 1,061 உயிரிழப்புகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன.
விபத்து-உயிரிழப்புகளின் எண்ணிக்கையை இன்னும் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மது அருந்துதல் உள்பட சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒரு லட்சத்து 51 ஆயிரம் ஓட்டுனர் உரிமங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.