சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, வருகை மற்றும் பயணிகள் பாதுகாப்பு சோதனை முடித்து விமானத்தில் ஏறுவதற்கு எந்த கேட் வழியாக செல்ல வேண்டும் என்பன போன்ற விபரங்கள் அங்குள்ள அறிவிப்பு பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து அபுதாபி சென்ற ஒரு பயணி, விமான பயணிகள் எந்த கேட் வழியாக விமானத்தில் ஏற செல்ல வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பு இந்தியில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், தமிழ், ஆங்கிலம் வரவில்லை எனவும் தனது சமூக வலைதள பக்கத்தில் படத்துடன் வெளியிட்டு உள்ளார்.
இதை கண்ட சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தப்படும் என பதில் போட்டு இருந்தனர். பின்னர் அந்த சமூக வலைதளத்தில், "தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் தகவல் ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் இடைவெளி நேரம் உள்ளதால் பயணி அதை கவனிக்காமல் இருந்து இருக்கலாம். எனினும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.