சென்னை,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 4,789 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 69 பேரில் 63 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 19 பேர் வீடு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 64 வயது பெண் கொரோனா பாதிப்புக்கு பலியானதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.