சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் நிர்வாகத்திறமை மற்றும் ஊழலை மறைப்பதற்காக அப்பாவி மக்கள் மீது தாங்க முடியாத அளவுக்கு கட்டணச் சுமையை தமிழக ஆட்சியாளர்கள் சுமத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. பஸ் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழலை ஒழித்து, வருவாயைப் பெருக்கி போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்கவும், சேவையின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
பணமதிப்பு அழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என மத்திய அரசு தொடுத்த அடுக்கடுக்கான தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கும் தமிழக மக்களை, பஸ் கட்டண உயர்வு என்ற சம்மட்டியால் தாக்கியிருக்கிறது அ.தி.மு.க. அரசு. கட்டண உயர்வோடு விபத்து மற்றும் சுங்க வரியும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் ஈவு இரக்கமற்ற இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
பிற கட்சிகள்
இதேபோல தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநிலத்தலைவர் எம்.எம்.ஆர்.மதன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பொதுச்செயலாளர் கே.சி.ராஜா உள்ளிட்டோரும் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.