நடுரோட்டில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பேரை தேடிவருகிறார்கள்..
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொலை செய்ய திட்டம்
மதுரை அனுப்பானடி கணேஷ் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் பாபி கார்த்திக் (வயது 35). இவர் மீது வழிப்பறி, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ராமர்பாண்டியன் தரப்பினர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த ராமர்பாண்டியன் தரப்பினர் அந்த வழியாக வந்த பாபி கார்த்திக்கிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்துள்ளனர்.
ஓட, ஓட விரட்டி கொலை
இதனையடுத்து ராமர் பாண்டியன் தரப்பை சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் தனியாக சென்ற போது, பாபி கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த காளீஸ்வரன், நடந்த சம்பவம் குறித்து தங்கள் தரப்பினரிடம் தெரிவித்தார். ஆத்திரம் அடைந்த ராமர்பாண்டியன் தரப்பினர் பாபி கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பாபி கார்த்திக், தன் நண்பர் வீட்டின் அருகே மதுகுடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமர்பாண்டியன் உள்ளிட்ட 13 பேர் அவரிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் ஆத்திரத்தில் சரமாரியாக பாபி கார்த்திக்கை வெட்டினர். அவர்களிடம் இருந்து அவர் தப்பி ஓடினார். ஆனால், அந்த கும்பல் ஓட, ஓட விரட்டிச்சென்று வெட்டியதில், பாபி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி தகவல் அறிந்த தெப்பக்குளம் போலீசா பாபி கார்த்திக்கின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் ராமர்பாண்டியன், 17-வயது சிறுவன் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
5 பேர் கைது
இதில் தனசேகரன், வேல் பிரதாப், சுந்தரபாண்டி, பாலமுரளி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ராமர்பாண்டியன் உள்ளிட்ட 8 பேரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.