கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தடை விதிக்க வேண்டும் - ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், திருவள்ளூரைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'நான், எம்.ஜி.ஆர். மக்கள் கட்சியின் தலைவராக உள்ளேன். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில், பொது அரசியல் எதிரியை வீழ்த்துவதற்காக, சுயநல நோக்கில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அமைப்பது, ஜனநாயகத்துக்கு விரோதமானது.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, மக்கள் நலனை பற்றி அக்கறை கொள்வதில்லை. தேர்தல் வெற்றிக்குப்பின், மக்கள் தீர்ப்பை இரண்டாம்பட்சமாக கருதி, கட்சிகள் அணி மாறுவதால், ஆட்சியில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு விடுகிறது. இதன்காரணமாக ஆட்சி கவிழ்ந்து விடுகிறது. இப்படிதான் 1970-ம் ஆண்டு ஜனதா கட்சி அரசு கவிழ்ந்தது.

எனவே, சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட உத்தரவிட வேண்டும். தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அமைக்கக்கூடாது என்று அரசியல் கட்சிகளை அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

Also read:சிம் கார்டு இல்லாவிட்டால் இயங்காது...வேலையை ஆரம்பித்த வாட்ஸ் அப்

அதுபோல தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்ட பெரிய அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விடுகின்றனர். தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்டோர் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

ஆனால், எங்களைப்போல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டு, 13 நாட்களே பிரசாரம் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது. இதனால் சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்களின் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னரே பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளை அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.