சென்னை,
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இந்நிலையில் தன் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் துரைக்கண்ணு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வேளாண்துறை அமைச்சரும், அதிமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தஞ்சாவூர் மாவட்டம் இராஜகிரி கிராமத்தில் மிகவும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த துரைக்கண்ணு கடுமையான உழைப்பின் காரணமாக அமைச்சராக உயர்ந்தார். பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன்பின் வந்த இரு தேர்தல்களிலும் அப்பதவியை தக்க வைத்துக் கொண்டார். 2016-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வேளாண்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். மிகவும் எளியவராகவும், அணுகுவதற்கு எளிமையானவராகவும் திகழ்ந்த அவர், தொகுதி மக்களின் அன்பை பெற்றிருந்தார்.
என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டிருந்தவர். கடந்த 13-ஆம் தேதி திண்டிவனம் அருகே மகிழுந்தில் சென்ற போது உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர், உடனடியாக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின் பயனாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.