தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமம் சேத்துகிணறு வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் விஜி (38 வயது). கால்பந்து வீரர். இவர், மாணவர்களை போட்டிகளில் கலந்துகொள்ள அழைத்து செல்வது வழக்கம். கடந்த 11-ந்தேதி விஜி திடீரென மாயமானார். இதையடுத்து குடும்பத்தினர் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ரங்கசந்திரம் கிராமத்தில் கன்டெய்னரால் ஆன வீட்டின் ஜன்னலில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் விஜி பிணமாக தொங்கியது தெரியவந்தது. விஜியின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் விளையாட்டு பயிற்சியின்போது பள்ளி மாணவர் ஒருவருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் மனம் உடைந்து மாயமான விஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.