சென்னை,
தமிழ்நாட்டில் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு எம்.டி. மற்றும் எம்.எஸ். போன்ற மேல் படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதோடு கிராமபுற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதை எதிர்த்து டாக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இதில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கடினமான பகுதிகளில் பணியாற்றிய டாக்டர்களுக்கு அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற ரீதியில் அதிகபட்சம் 30 சதவீதம் ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும்.
இது தொடர்பாக மருத்துவ கவுன்சில் விதிகளின்படி தமிழக அரசு கடினமான பகுதிகளை வகைப்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பின் மூலும் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என்ற நிலை ஏற்பட்டது. கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மருத்துவ கல்வி இயக்ககம் மருத்துவ முதுநிலை தர வரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி இந்த தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. தரவரிசைப்பட்டியலை http://www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்) ஆகியவற்றில் அரசு இடங்களுக்கான தரவரிசைப்பட்டியலும், அரசு பல்மருத்துவக்கல்லூரிகள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்) ஆகியவற்றில் அரசு இடங்களுக்கான தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
கடினமான இடங்களில் பணியாற்றிய ஆண்டு, மற்றும் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண், ஊக்க மதிப்பெண் போன்றவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. நாளை முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. நாளை மறுநாள் அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 9 முதல் 11-ம் தேதி வரையில் பொது பிரிவு கலந்தாய்வு நடக்கிறது. 11ம் தேதி எம்.டிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.