பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா திருவள்ளூவர் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் மின் மயானம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் முதல் கட்ட பணி தொடங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் மின் மயானத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மின் மயானம் அமைக்கக்கூடாது என்றனர். இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி ஆய்வு நடத்தினார். அவர் இதுகுறித்து கலெக்டர் அருணாவிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார். அப்போது கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி, நெல்லியாளம் நகராட்சி பொறியாளர் வசந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.