தமிழக செய்திகள்

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் கைது

திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம்:

திண்டிவனம் அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலவினோதன் மனைவி கலைமணி (வயது 58). இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.

அதன்பிறகு அந்த மனைப்பட்டா தொடர்பான ஆவணங்களை திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமாம். ஆனால் வெகுநாட்களாக இந்த இலவச மனைப்பட்டா தொடர்பான பதிவுகளை கலைமணி பதிவு செய்யவில்லை.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

இந்த நிலையில் இந்த மனைப்பட்டாவில் கலைமணி பெயர் மற்றும் ஆவணங்களை பதிவு செய்ய அவருடைய மகன் யுவராஜ் (30) என்பவர் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார். மேலும், இந்த கோரிக்கை தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பதிவறை எழுத்தர் சிவஞானவேல் (48) என்பவரை யுவராஜ் அணுகினார்.

அதற்கு கிராம, வட்ட ஆவணங்களில் திருத்தம் செய்வதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று சிவஞானவேல் கூறினார்.

போலீசில் புகார்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரையின்பேரில் யுவராஜ், ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை சிவஞானவேலிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் சிவஞானவேலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து இது பற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு