சென்னை,
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது.
தமிழர்கள் பாதிப்பு
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள ஈழத்தமிழர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு முன்வந்துள்ளது. ஆனால், அதற்கு மத்திய அரசின் அனுமதியும் பெற வேண்டியிருப்பதால், அதற்கான அனுமதியை உடனே வழங்கக்கோரி தமிழக சட்டசபையில் நேற்று தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இலங்கை பிரச்சினை
கடல் சூழ்ந்த இலங்கை நாடு, இன்று கண்ணீரால் சூழப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்காக தி.மு.க. அரசு ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆற்றிய பணிகளை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதைப் போல, நம்முடைய ரத்தத்தில், உணர்வில், வாழ்வில் கலந்த ஒரு பிரச்சினையாக இலங்கை பிரச்சினை இருந்து வருகிறது. இலங்கையில் வாழக்கூடிய ஈழத்தமிழர் நலன் கருதி அரசியல் ரீதியாக பல்வேறு முழக்கங்களை வெவ்வேறு காலக்கட்டங்களில் நாம் முன்வைத்திருக்கிறோம்.
தமிழக அரசின் நிலைப்பாடு
காலச்சக்கரம் இலங்கை மக்களை அலைக்கழித்து எங்கோ கொண்டு போய் நிறுத்திவிட்டது. இருப்பினும், இன்றைய நாள் மனிதாபிமான அடிப்படையில் நாம் கைகொடுக்க வேண்டும் என்பதே இந்த அரசினுடைய நிலைப்பாடு ஆகும்.
தற்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான காரண, காரியத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதேநேரத்தில், அங்குள்ள மக்கள் படக்கூடிய துன்பங்கள், துயரங்கள் நம் அனைவருடைய மனதிலும் சோகத்தை உருவாக்கியிருக்கிறது.
மக்களை பிரித்து பார்க்க வேண்டாம்
இலங்கை மக்களின் வாழ்க்கை என்பது மிகமிக மோசமான நிலையை அடைந்துள்ளது. அண்டை நாட்டு பிரச்சினையாக இதை நாம் பார்க்க முடியாது. அங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள்; அவர்கள் எத்தகையவர்கள் என பார்க்க இயலாது. அந்த நாட்டு மக்களுக்கு நம்மால் ஆன உதவியை நாம் செய்தாக வேண்டும் என்பதை தெரிவிக்க நான் விரும்புகிறேன்.
இலங்கையில் இருந்து இத்தகைய செய்திகள் வந்ததுமே, ஈழத் தமிழ் மக்களுக்கு நம்மால் ஆன அனைத்தையும் வழங்குவோம் என்று நான் அறிவித்தேன். பிரதமரை 31-3-2022 அன்று நான் நேரிலே சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது அதனை அறிந்து இலங்கை தமிழர் தலைவர்களும், சில தமிழ் அமைப்புகளும் எனக்கு வைத்த கோரிக்கை, தனியாக தமிழர்களுக்கு மட்டும் உதவி என்று அனுப்ப வேண்டாம்; இலங்கை மக்களுக்கு என்று பொதுவாக அனுப்புங்கள்; மக்களை பிரித்து பார்க்க வேண்டாம்; அனைத்து இன மக்களும் சேர்ந்துதான் இந்த நெருக்கடியை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.
தமிழர் பண்பாடு
அதை கேட்டபோது நான் நெகிழ்ந்து போனேன். என்னால் உணர்ச்சிப்பெருக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதான் தமிழர் பண்பாடு. பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்பதைப் போல, இலங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இந்த நிலையில், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் பின்வரும் அத்தியாவசிய பொருட்களை வழங்கலாம் என தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. முக்கியமாக 40 ஆயிரம் டன் அரிசி; இதனுடைய ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.80 கோடி; அதேபோல், உயிர் காக்கக்கூடிய 137 மருந்து பொருட்கள்; இதன் மதிப்பு ரூ.28 கோடி; குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர்; இதன் மதிப்பு ரூ.15 கோடி.
இவற்றையெல்லாம் இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம். இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. மத்திய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும்.
காலத்தின் கட்டளை
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்கிறார் வள்ளுவர். உதவி என்பதும் மனிதாபிமான அடிப்படையில் உடனடி உதவியாக இருக்க வேண்டும். காலத்தே செய்தால்தான் அது உதவி. இதனைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த எண்ணத்தை மத்திய அரசுக்கு சொல்லக்கூடிய வகையில் ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவது காலத்தினுடைய கட்டளை என்று அரசு கருதுகிறது. அதனடிப்படையில், தீர்மானத்தை நான் இங்கே முன்மொழியக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இலங்கையில் தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது என்றும்; இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு ஏற்கனவே மாநில அரசு கடிதம் எழுதியிருக்கிறது.
மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
எனினும், இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய வகையில், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.
இந்த தீர்மானத்தை கட்சி எல்லைகளைக் கடந்து, கருணை உள்ளத்தோடு அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து கட்சிகளும் ஆதரவு
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த வரலாற்று சிறப்புமிக்க, மனிதநேயமிக்க தீர்மானத்தை ஆதரித்து பேசியிருக்கக்கூடிய எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இங்கேயிருக்கக்கூடிய பல்வேறு கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், இந்த தீர்மானத்தை வரவேற்று, ஆதரித்து, இதை ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டுமென்ற அடிப்படையிலே பேசியதற்கு முதலில் என்னுடைய நன்றியை உங்கள் அத்தனை பேருக்கும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
மேலும் உதவ தயார்
கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கக்கூடிய இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிடும் நோக்கில், இன்று தமிழக அரசு அறிவித்துள்ள உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கக்கூடிய மருந்துகள் அடங்கிய உதவி என்பது முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதுதான்.
இலங்கை நாட்டு மக்களுக்கு இன்னும் உதவி தேவைப்படுமென்றால், அடுத்தகட்டமாக உதவிகள் செய்வதற்கு தமிழக அரசு என்றைக்கும் தயாராக இருக்கிறது. அதுமட்டுமல்ல; பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி கூட குறிப்பிட்டுச் சொன்னார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் உணர்வுகளைத் தாங்கி, தமிழ்நாட்டு மக்கள், அதேபோல, அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய முன்வந்தால், அவற்றையும் ஒருங்கிணைத்து, மத்திய அரசின் மூலமாக இலங்கை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.
ஒருமனதாக நிறைவேற்றம்
இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழக சட்டசபையில் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரதமருக்கு கடிதம்
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இலங்கையில் நிலைமை மோசமடைந்து வருகிறது. 31-3-2022 அன்று நான் ஏற்கனவே அளித்த கோரிக்கை மனுவின் மூலம் இந்த பிரச்சினையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன்.
இலங்கையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். மேலும் 15-4-2022 அன்று வெளியுறவுத்துறை மந்திரிக்கு நான் எழுதிய கடிதத்திலும், அவருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதும் இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததோடு, இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான பொருட்களையும், உதவிகளையும் வழங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியை கோரியிருந்தேன்.
தீர்மானம்
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று அத்தியாவசிய பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் இன்று (நேற்று) (29-4-2022) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டில் இருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச்செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் பிரதமரின் மேலான கவனத்துக்கு இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.