சென்னை,
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
சென்னையில் தன்னார்வலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி உடையவர்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சராசரியாக தினமும் 3,500 பேர் வரை கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு 5,700 டன் குப்பைகள் சேர்ந்து வந்தது. கடந்த 3 மாதங்களாக இது ஒரு நாளைக்கு 3,100 டன் அளவாக குறைந்துள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு தினமும் 95 மாநகராட்சி பேருந்துகள் மூலம் தூய்மை பணியாளர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பாக காலை, மதியம் ஆகிய இரு வேளையும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் புதிய முககவசங்கள் மற்றும் வாரம் ஒருமுறை புதிய கையுறைகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 345 மாநகராட்சி பணியாளர்களில், 50 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் பாதிக்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது குறித்து, அரசிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.