மதுரை,
மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் தவறுதலாக உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மருத்துவ கல்லூரியின் மாணவர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, வரவேற்பு விழா நடத்துவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. மேலும் நாங்கள் பதிவிறக்கம் செய்த உறுதிமொழிப் படிவத்தை பேராசிரியர்களிடம் என யாரிடமும் காண்பிக்கவில்லை. நாங்கள் தயாரித்தது என்ன என்பது குறித்து அவர்களுக்கு தெரியாது. சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் எழுதியே வாசித்தோம். சமஸ்கிருதத்தில் படிக்கவில்லை. இந்த தவறுக்கு மாணவர் அமைப்பு முழுப்பொறுப்பு, முழுக்காரணம். உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. சமஸ்கிருதத்தில் இருக்கும் மகரிஷி சரக் சபத் உறுதிமொழி படிவத்தை ஏற்கக் கூடாது என்பது குறித்து அரசிடம் இருந்து எந்தவித தெளிவான வழிகாட்டுதல் இல்லை. நேற்று தான் அதுகுறித்த தகவல் தெரியவந்தது என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்த விவகாரம் தொடர்பாக, கல்லூரி மாணவர் தலைவர் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் விசாரணை நடத்தி வருகிறார்.