சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஆளும் கட்சியை சார்ந்தவர்களும், சமூக விரோதிகளும் தங்களுடைய அடாவடிச் செயல்களுக்கு லைசென்ஸ் கிடைத்ததுபோல், இன்றுவரை பேயாட்டம் போட்டு வருகிறார்கள். தங்களை கேள்வி கேட்பதற்கோ, தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்ற மமதையோடு செயல்பட்டு வருகிறார்கள். ஒருசில சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதுபோல் இந்த பொம்மை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பாவ்லா கட்டுகிறாரே தவிர, உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய அளவிற்குத்தான் ஒப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (22.2.2026) ஒசூர், அன்னை அரவிந்தர் நகரைச் சேர்ந்த சிவமூர்த்தி அவர்களுடைய வீட்டின் முன் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதை, காரில் வந்த ஆதித்யா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் கேள்வி கேட்டதாகவும், தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் காரை ஒட்டிச் சென்று சிவமூர்த்தி, கிருபாகரன், அம்சவள்ளி மற்றும் 6 மாத குழந்தை ஆகியோர் மீது மோதியுள்ளனர். இதில், குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், காயமடைந்த பெரியவர்கள் மூவரையும் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
படுகாயமடைந்த சிவமூர்த்தி, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். மரணமடைந்த சிவமூர்த்தி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்ததாகவும், காயமடைந்த அவருடைய மகன் மற்றும் மருமகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர் சிவமூர்த்தியை, காரை ஏற்றிக் கொன்றதாக அறியப்படும் ஆதித்யாவின் தந்தை சீனிவாசன், திமுகவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்.
இன்னொரு நிகழ்வில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தில் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியின்போது நடைபெறும் மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், திமுக-வின் காவேரிபட்டினம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மகேந்திரன் என்பவரது மகன் ஆகாஷ் மற்றும் அவனது நண்பர்களுக்கும், மற்றொரு கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், ஆகாஷ் கும்பல் கத்தி மற்றும் ஆயுதங்களால் எதிர் கோஷ்டியினரைத் தாக்கியதில், சுமார் 15 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே திமுக ஒன்றியச் செயலாளர் மகன் ஆகாஷ் மீது 'புள்ளிங்கோ ரீல்ஸ் வழக்கு', 'கஞ்சா விற்பனை வழக்கு' மற்றும் 'சென்ற வருடம் நடைபெற்ற மயானக் கொள்ளையில் தகராறு' என்று பல்வேறு வழக்குகள் பதியப்பட்டும், காவல்துறை இதுவரை அவர் மீது எந்தவித முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவியைப் படிக்க வைக்கிறேன் என்று சொல்லி கொடுமைப்படுத்திய வழக்கு, மணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ., கிட்னி முறைகேடு வழக்கு, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., காட்சி ஊடக நிருபரையும், ஒளிப்பதிவாளரையும் தாக்கிய வழக்கு, வெளிநாடுகளுக்கு மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளைக் கடத்திய திமுக அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை - திமுக நிர்வாகி மற்றும் பின்புலத்தில் இருந்த சார், மணல் கடத்தலைத் தடுத்த பெண் D.S.P. மீது தாக்குதல் என்று, இதுபோல் தமிழகமெங்கும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பலமுனைத் தாக்குதலில் ஒருசில நிகழ்வுகள் இந்த ஆட்சியின் தோல்வியை பறைசாற்றுகின்றன.
விவசாய நலனில் அக்கறை காட்டாத, பெண்களுக்கு பாதுகாப்பு தரத் தவறிய, பொதுமக்களை அச்சுறுத்தி, தமிழ் நாட்டைப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றிய, சுய தம்பட்டம் அடித்து விளம்பரத்தை மட்டுமே நம்பியுள்ள, இளைஞர்களின் வாழ்வை போதையால் சீரழிக்க, தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப்பொருளை புழங்கவிட்ட, துறைதோறும் லஞ்ச லாவண்யத்தை பெருக்கி, கஜானாவை சூரையாடிய, ஒரு குடும்பம் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும், தேர்தல் ஆதாயத்திற்காக மட்டும் திட்டங்களை போடும், திராவிட மாடல் என்ற முகமூடியைப் பயன்படுத்தி, தங்களின் கொடூர முகத்தை மூடி மறைத்த, என்று திமுக ஆட்சியின் தோல்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்று சொல்லி விட்டு, 2ஜி ஊழல் முதல், டாஸ்மாக், போலி மதுபான பார்கள், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாளர் நியமன ஊழல், கனிமவளக் கொள்ளை போன்ற எண்ணற்ற ஊழல்களைச் செய்து, தமிழ்நாடு மக்களின் தலையை தொங்கவிட்ட முதல்-அமைச்சர் ஸ்டாலினின் மக்கள் விரோத தீய சக்தி திமுக அரசு இனி தொடரக்கூடாது. தமிழ்நாட்டின் நலன் கருதி தூக்கி எறியப்பட வேண்டிய ஆட்சி, ஸ்டாலினின் விடியா திமுக ஆட்சி.
திமுக ஆட்சியின் தோல்விகளை மடைமாற்ற, மக்களை திசை திருப்ப தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும்தான் போர் போர் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் வீரவசனம் பேசி வருகிறார். இவரது மந்திரிகள் மீது நடக்கும் லஞ்ச லாவண்ய வழக்குகளுக்காக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு என்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையை மாற்ற 24-ம் புலிகேசி போல் தினமும் ஒரு சவடால் விட்டுக்கொண்டிருக்கிறார்.
தமிழகத்தை புதைகுழியில் தள்ளியுள்ள ஸ்டாலினுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.