கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகள் - டிடிவி தினகரன் கண்டனம்

சிவகங்கை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகக் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், போதுமான வசதியின்மை காரணமாக தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 31-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் குடியிருப்பு தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாகவே இருப்பது அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான குடியிருப்புகளைக் கூட முறையாகக் கட்டிக் கொடுக்க முடியாத திமுக அரசும், அதன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பையும், அவர்களின் உரிமையை மீட்கவும் குரல் கொடுப்பது என்பது வெட்கக்கேடானது.

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதோடு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்திட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT