சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒக்கிளிப்பட்டியில் பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி, அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள், நெஞ்சை கனக்கச் செய்கின்றன. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.
பாலியல் கொடுமை செய்யும் மிருகங்கள் எல்லாம் எந்த சொரணையுமின்றி சொகுசாக வாழ்ந்து வரும் திமுக ஆட்சியில், பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானம் தாங்காமல் வீட்டிற்குள் முடங்கிப் போவதும், தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதும் கொடூரமானது. “அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படும் மு.க.ஸ்டாலின், தமிழகப் பெண்களை மனதளவிலும் உடலளவிலும் கவனமாகப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
ஆனால், ஆளும் அரசு பெண்களைக் கைவிட்டாலும், அதன் கீழ் இயங்கும் ஏவல்துறை பெண்கள் பாதுகாப்பை அடகு வைத்தாலும், நீதியின் மீது கொண்ட நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது. மன உறுதியுடன் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டுமே தவிர, தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.