சென்னை,
தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கான தேர்தலை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இதில், தி.மு.க. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம், வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்துள்ளார். அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர்.
இதேபோன்று பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு முன் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தங்களது வேட்பு மனுக்களை வைத்து ஆசி பெற்றனர். வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் பேசிய முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா தி.மு.க.வின் தலைவராக ஒருமனதாக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார் என கூறினார்.
தலைவராக ஸ்டாலின் வரவேண்டும் என்று ஒட்டு மொத்த தி.மு.க.வும் விருப்பத்தினை வெளிப்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாளர் பதவிக்கும் துரைமுருகன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று ஆ. ராசா கூறியுள்ளார். தி.மு.க.வின் வரலாற்றில் கருணாநிதிக்கு பின்னர் 2வது தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வாகிறார்.