தமிழக செய்திகள்

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் விபத்து எதிரொலி: தண்டவாளத்தை மாற்றி அமைக்கும் பணி தொடங்கியது

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் விபத்து எதிரொலியாக 4-வது நடைமேடை அருகே தண்டவாளத்தை மாற்றி அமைக்கும் பணி தொடங்கியது.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந் தேதி கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு மின்சார ரெயில் 4-வது நடைமேடை பகுதியில் சென்றபோது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக இறந்தனர். அதற்கு முந்தைய நாள் அதே இடத்தில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், பரங்கிமலை ரெயில் நிலைய 4-வது நடைமேடை அருகே உள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

கருத்துகேட்பு

கடந்த மாதம் 30-ந் தேதி ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். அப்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்திய பொதுமக்கள், பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடை வழியாக தென்மாவட்டங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும்போது இடையூறாக உள்ள தடுப்பு சுவர்களையும் அகற்றும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 6-ந் தேதி பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார், 4-வது நடைமேடையில் இடையூறாக இருந்த தடுப்பு சுவரை சுமார் 30 அடி நீளத்துக்கு இடித்து அகற்றினர்.

பணிகள் தொடக்கம்

ஆனால் அடுத்தடுத்து 2 நாட்களில் 7 உயிர்களை பலி வாங்கிய பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் உள்ள தடுப்பு சுவரை அகற்றுவது சாத்தியம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பதிலாக தண்டவாளம் அருகே நடைமேடையின் முன்புறம் உள்ள சுவரை அகற்றி, 4-வது தண்டவாளத்தை சில அடி தூரம் தள்ளி அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக 4-வது தண்டவாளத்தில் நடைமேடை ஓரம் உள்ள ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தை மாற்றி அமைக்கும் வகையில் நடைமேடையின் முன்புறம் உள்ள சுவரை அகற்றும் பணியை ரெயில்வே ஊழியர்கள் தொடங்கினர். விரைவில் இந்த பணிகள் முடிந்து 4-வது நடைமேடையில் ரெயில் போக்குவரத்து நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை