தமிழக செய்திகள்

மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரெயில்: 27-ந்தேதி முதல் இயக்கம்

கோடைகால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுவது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். இந்த மலை ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. தற்போது பள்ளி, கல்லூரிகளில் இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும் கோடைகால விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மலை ரெயிலில் பயணச்சீட்டு கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடைகால சிறப்பு மலை ரெயிலை இயக்க சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில் வருகிற 27-ந்தேதி முதல் ஜூலை மாதம் 5-ந்தேதி வரை வெள்ளிக்கிழமை, ஞாயிறுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட உள்ளது. காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு மலை ரெயில் பகல் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது.

Also read:அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது? - ஜி.கே.வாசன் பதில்

அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வருகிற 28-ந்தேதி முதல் ஜூலை மாதம் 6-ந்தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து காலை 11.25 க்கு புறப்படும் மலை ரெயில் மாலை 4:20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை வந்து அடைகிறது. இந்த கோடைகால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுவது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.