

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே பெருமணம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் அய்யப்பன் (38 வயது), தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு 19 வயதுடைய இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் அய்யப்பன் அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இளம்பெண் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அய்யப்பனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா தீர்ப்பு கூறினார்.
அதில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த அய்யப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசின் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தார். இதையடுத்து அய்யப்பனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.