தமிழக செய்திகள்

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சகம் பெயரை மாற்றம் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது சீமான் அறிக்கை

தமிழ் மொழி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சகம் பெயரை மாற்றம் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்மொழி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அமைச்சகமான தமிழ் வளர்ச்சித்துறை' அமைச்சகத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை எனப் பெயர் மாற்றம் செய்து அதனை தொழில் துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாய் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் பண்பாட்டு விழுமியங்களை மீட்கவும், தொல்லியல் கூறுகளைக் காக்கவும் செயல்பட அரசுக்கு நோக்கமிருந்தால் அதற்கென தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கி இருக்கலாம். அதைவிடுத்து, மொழி வளர்ச்சிக்கென இருந்த ஒரே அமைச்சகத்தை, பண்பாட்டுத்துறை என மாற்றிப் பொதுமைப்படுத்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை தமிழ்நாட்டில் திணிப்பதற்கான பணிகளை முனைப்போடு மேற்கொள்கின்ற தற்போதைய இக்கட்டான கால கட்டத்தில் முன்பைவிட இன்னும் வீரியமாக தமிழ் வளர்ச்சித்துறைக்கு முன்னுரிமை கொடுத்து, அதனை முதன்மையான துறையாக விளங்கிடச் செய்யும் பணிகளில் ஈடுபடாமல், அந்த துறையின் பெயரையே, தமிழ் பண்பாட்டுத்துறை என மாற்றியமைத்துத் தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பின்னோக்கி தள்ளியிருப்பது வருத்தம் அளிக்கிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில்கூடத் தமிழ் வளர்ச்சித்துறைக்கென தனி அமைச்சரை நியமித்து தனித்துவமாக செயல்படுவதற்கான வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அத்தகைய குறைந்தபட்ச முக்கியத்துவத்தைக்கூட தி.மு.க. அரசு தர மறுத்து இருப்பது நியாயமற்றது.

தமிழ் வளர்ச்சி துறையை இன்னும் அதிக அதிகாரங்களுடன் மீண்டும் தனித்துறையாக உருவாக்கி அந்த துறைக்கு ஆற்றல்மிக்க ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்