விழுப்புரம்,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அவரது திண்டிவனம் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர் வேலுமணி, அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய 4 அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் டாக்டர் ராமதாஸ் இடையில் நடைபெறும் 3வது சந்திப்பு இதுவாகும்.
கடந்த மாதம் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து 2வது முறையாக அதிமுக அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் வன்னியர்களுக்கான 20 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து பேசியதாகவும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்க உள்ளதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது 4 தமிழக அமைச்சர்கள் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசி வருகின்றனர்.