தமிழக செய்திகள்

போக்குவரத்தில் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தமிழகம்-கேரளா இடையே குழு அமைப்பு

இரு மாநிலங்களுக்கும் இடையே சோதனைச்சாவடி பிரச்சினை உள்ளிட்ட போக்குவரத்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக குழு அமைக்கப்படும் என்று கேரளா மந்திரி அந்தோணி ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை, கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி அந்தோணி ராஜூ நேற்று சந்தித்து பேசினார். இரு மாநிலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது தமிழக போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், கேரள சாலை போக்குவரத்து கழக செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிஜூ பிரபாகர் உடன் இருந்தனர்.

தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், கேரள மந்திரி என்னுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பொறுத்தவரை, முதல்-அமைச்சருடனும், மத்திய அரசுடனும் பேசி தீர்வு காணலாம் என்று ஆலோசித்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து கேரள மந்திரி அந்தோணி ராஜூ அளித்த பேட்டி வருமாறு:-

தமிழக நிதித்துறை அமைச்சரையும் சந்தித்து பேசினோம். கொரோனா பரவல் காரணமாக கேரளா-தமிழகம் இடையே நீண்ட காலமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை கோரியிருந்தோம்.

தமிழக முதல்-அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சரும் இதற்காக நடவடிக்கை எடுத்து, தற்போது 2 மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நடந்து வருகிறது.

தற்போது சபரிமலை பக்தர்கள் மாலை போடும் காலகட்டமாகும். தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக கேரளாவிற்கு வருவார்கள். எனவே மிகச்சரியான நேரத்தில் இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை பொறுத்தவரை தமிழகம் மாதந்தோறும் ரூ.14 கோடியும், கேரளா ரூ.2 கோடிக்கு மேலாகவும் வழங்கி வருகின்றன. இந்த சுங்கக்கட்டணத்தில் இருந்து பொது போக்குவரத்தை மட்டுமாவது விலக்கி கொள்வதற்கு மத்திய அரசை 2 மாநிலங்களும் இணைந்து கோர முடிவு செய்துள்ளோம்.

மேலும், 2 மாநிலங்களுக்கும் இடையே சோதனைச்சாவடி பிரச்சினை உள்ளிட்ட போக்குவரத்தில் தினமும் வரும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக 2 மாநில போக்குவரத்து செயலாளர்கள், ஆணையர்களை கொண்ட குழு அமைக்கலாம் என்றும் ஆலோசித்துள்ளோம். விரைவில் இதுபற்றி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு