தமிழக செய்திகள்

கோவில் சொத்துக்களை ட்ரோன் கேமரா மூலம் கண்டறியும் பணி விரைவில் முடியும் - அறநிலையத்துறை ஆணையர் தகவல்

கோவில் சொத்துக்களை ட்ரோன் கேமரா மூலம் புவிசார் தகவல் அடிப்படையில் கண்டறியும் பணி விரைவில் முடியும் என அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தையும், பிரசித்திபெற்ற கோயில்களின் தனிப்பட்ட இணையதளங்களையும் முறையாக பராமரிக்க கோரி ஐகோர்ட்டில் ராதா ராஜன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அனிதா சுமந்த், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், அவற்றின் சொத்துக்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், கோவில் சொத்துக்களை கண்டறிவது, சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்திலான அலுவலர் ஜெயபாரதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகள் காரணமாக நில அளவையர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் அப்பணிகளில் ஈடுபடுத்தப்படாததால், கோவில் சொத்துக்களை கண்டறிந்து ஆய்வு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் சொத்துக்களை கண்டறிவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், கொரோனா பரவலால் ஆய்விற்கு அனுப்ப முடியவில்லை என்றும், அதற்கு மாற்றாக ட்ரோன் கேமரா மூலம் முப்பரிமாண அடிப்படையில் படமெடுக்கப்பட்டு, கோயிலுக்கு சொந்தமான நிலம், கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து நீள, அகல, உயர அடிப்படையில் அறிந்துகொள்ளும் ஜி.ஐ.எஸ். எனப்படும் புவி சார்ந்த தகவல் முறையில் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவை ஆவணமாக மாற்றப்பட்டு அந்த சொத்தின் மதிப்பு கணக்கிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் சொத்துக்களின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய வாடகை அல்லது குத்தகையின் நிலை உள்ளிட்ட விவரங்களும், ஜி.ஐ.எஸ். விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கினை ஜூலை 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது