சென்னை,
தி.மு.க. எனும் பேரியக்கம் எப்போதுமே இளைஞர்களின் பாசறையாக, பாடிவீடாக விளங்குகின்ற இயக்கம். அதனால்தான் என் இளமை பருவத்திலேயே தலைவர்களின் செயல்பாடுகளை கண்டு, அதனால் உந்துதல் பெற்று, நண்பர்களுடன் இணைந்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை தொடங்கினேன். மாநகராட்சி தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டேன். அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.
1980-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியால் மதுரை ஜான்சிராணி பூங்காவில் தி.மு.க.வின் துணை அமைப்பாக இளைஞரணி உருவாக்கப்பட்டது. இளைஞரணியின் வளர்ச்சி கண்டு கருணாநிதி மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட நிகழ்வுகள் பலவற்றை கண்டிருக்கிறேன்.
எண்ணம் எல்லாம் இளமை
கருணாநிதியை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த நிலையில், தி.மு.க. எனும் பேரியக்கத்தின் தலைவர் பொறுப்பை உங்களில் ஒருவனான என் தோளில் உடன்பிறப்புகளான சுமத்தியிருக்கிறீர்கள். தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்ற பொறுப்பை இந்த மாநிலத்து மக்கள் பெரும் நம்பிக்கையுடன் என்னிடம் அளித்திருக்கிறார்கள். 2 பொறுப்புகளிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என்ற உறுதியுடன் என் பணிகளைத் தொடர்ந்து வருகிறேன்.
இத்தனை பொறுப்புகள் இருந்தாலும் என் இளமை பருவம் முதல் இயக்கத்தோடு என்னை இரண்டற கலக்கச்செய்த கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. அமைப்பும், கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட இளைஞரணியும் இயக்கத்தில் எனக்கு தாய் மடியாகும். அதில் தவிழ்ந்த காலத்தை இப்போது நினைத்தாலும் இனிமை தருகிறது. எண்ணம் எல்லாம் இளமை ஆகிறது.
பயிற்சி பாசறை கூட்டங்கள்
இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ளநிலையில், தற்போது அதனை தம்பி உதயநிதி சிறப்பாக முன்னெடுத்து வருவதை கண்டு தந்தையாக அல்லாமல், கட்சியின் தலைவராக மகிழ்கிறேன். காலத்துக்கும், களத்துக்கும் ஏற்றவகையில் அதன் செயல்பாடுகள் தொடரவேண்டும் என விரும்புகிறேன்.
கருணாநிதியின் 99-வது பிறந்த ஆண்டினையொட்டி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைக்கு திராவிட இயக்க கொள்கைகளையும், சாதனைகளையும் சரியான முறையில் கொண்டுசேர்த்து, மதவாத அரசியல் சக்திகள் அந்த மண்ணில் ஊடுருவ செய்யாமல் தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்தவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனே, இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் சிறப்பான கருத்தரங்கை நடத்தி, அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தொகுதியிலும் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
உறுதிமிக்க செயல்பாடுகள்
இத்தகைய வேகமும் இளைஞர்களிடம் லட்சியத்தை கொண்டுசேர்க்கின்ற வியூகமும், எதையும் தாங்கும் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து தமிழ்நாட்டை உலகளவில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு துணை நிற்கக்கூடியதாகும். இயக்கத்தை கட்டிக்காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி ஆகிய ஐம்பெரும் முழக்கங்களை கருணாநிதி தந்திருக்கிறார். இதுதான் திராவிட மாடலின் இலக்கணம். அந்த இலக்கணத்தை கடைப்பிடித்து, 'அனைவருக்கும் அனைத்தும்' என்ற உன்னத லட்சியத்தை கொண்ட இயக்கத்தை கட்டிக்காக்கும் பெரும்பணியில் இளைஞரணி பட்டாளத்தின் உறுதிமிக்க செயல்பாடுகள் தொடர்ந்திட தாயுள்ளத்தோடு வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.