சென்னை புத்தக கண்காட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 44-வது சென்னை புத்தக கண்காட்சி கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந் தேதி தொடங்கியது. 700 அரங்குகளுடன் 500 பதிப்பாளர்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இதில் தந்தி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள், 242 மற்றும் 243 அரங்குகளில் கிடைக்கின்றன.ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, மொத்தம் 14 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த புத்தக கண்காட்சி, நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெற உள்ளது.
7 லட்சம் பேர்
கொரோனா காரணமாக தாமதமாக புத்தக கண்காட்சி இந்த ஆண்டு தொடங்கி இருந்தாலும், வாசகர்களிடம் வரவேற்பு எதிர்பார்த்த அளவில் இருந்ததாகவும், இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு இருப்பதாகவும் பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கிப்போய் இருந்த பலர் எழுத்தாளர்களாக உருவெடுத்து இருப்பதாகவும், நவீன இலக்கியம், சரித்திர நாவல்கள், குழந்தைகளுக்கான அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள், ஆங்கில நாவல்கள், வரலாறு நூல்கள், சுயமுன்னேற்ற நூல்கள் ஆகியவற்றை வாசகர்கள் தேடி வாங்கிச் செல்வதாகவும், 50 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருவது குறைந்திருப்பதாகவும் பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன் கூறினார்.
மகளிர் தின நிகழ்ச்சிகள்
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை புத்தக கண்காட்சியில் இன்று (திங்கட்கிழமை) மகளிர்களை கொண்டு சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. வே.வனிதா தலைமை தாங்குகிறார்.மேலும் ஐரோப்பாவில் பெண் எழுச்சிக்கு வித்திட்ட நூல் வாசிப்பு என்ற தலைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தலைவர் சுபாஷினியும், நடுவுல கொஞ்சம் அறிவியலை காணோம் என்ற தலைப்பில் மனநல மருத்துவர் ஷாலினியும், புத்தகங்கள் பெண்களின் ஆயுதங்கள் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜூம் கருத்துரையாற்ற
உள்ளனர்.
நிறைவு நாள் நிகழ்ச்சி
நிறைவு நாளான நாளை மாலை 6 மணிக்கு பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வுடன் புத்தக கண்காட்சி முடிவடைகிறது. இந்த நிறைவுநாள் நிகழ்ச்சிக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை தாங்குகிறார்.இந்த புத்தக கண்காட்சியை தொடர்ந்து ஈரோடு மற்றும் மதுரையில் வருகிற ஆகஸ்டு மாதம் புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது என்றும், சென்னையில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதத்தில் வழக்கம்போல் புத்தக கண்காட்சி நடைபெறும் என்றும் பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.