திருச்சி,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலைப்பட்டியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு தொடர்பான விதிமுறைகள் அடுத்தவாரம் இறுதி செய்யப்படும். முதல்-அமைச்சருடன் கலந்தாலோசித்து அதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம். சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அது தொடர்பாக முடிவு எடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் நிலையில் அவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பள்ளிகள் நவம்பரில் தான் திறக்கப்பட்ட நிலையில் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த ஆண்டு எப்பொழுதும்போல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் படிப்படியாக இது தளர்த்தப்படும். குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தினமான வருகிற 19-ந்தேதி சென்னையில் உள்ள பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.