செங்குன்றம்,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா செங்குன்றம் சத்தியநாராயணன் தலைமையில் நடைபெற்றது. நீர் மோர் பந்தலை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:
சென்னையில் மெட்ரோ சுரங்க ரெயில் தொடங்கி உள்ளது. இதற்கு முழு முயற்சி எடுத்து நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்பது தமிழக மக்களுக்கு தெரியும். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்று எடுக்காத பிள்ளைக்கு பெயர் வைப்பதா? என்று அறிக்கை விடுத்துள்ளார்.
அறிவிப்பு வெளியிட்டால்...
அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியில் ஒரு கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தி இரு அணிகளும் இணைய வேண்டும் என முடிவெடுத்தபோது, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா படத்தை அகற்றியது வரவேற்கத்தக்கது. இரு அணிகளும் இணைய அதிகபட்சமான வாய்ப்பு இருக்கும் போது சில அமைச்சர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள்.
சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்குவோம் என முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டால் 24 மணி நேரத்தில் இரு அணிகளும் இணைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட துணை செயலாளர் மாதவரம் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.