சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்கான சட்டத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும்கூட, புதிய பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை சூட்டுவது நியாயம் அல்ல.
2001-ம் ஆண்டுவரை இருந்த ஒருமைப் பல்கலைக்கழகம், அப்போது எப்படி அண்ணா பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டதோ, அதேபெயரில் தான் இப்போதும் அழைக்கப்படவேண்டும். அதுதான் நீதியாகும். இதில் எந்த குழப்பங்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது.
ஒருமைப் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படாவிட்டால், அந்த பல்கலைக்கழகம் பெற்ற பெருமைகள், பன்னாட்டு கல்வி நிறுவனங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் செல்லாமல் போய்விடும்; கடந்த காலங்களில் மாணவ, மாணவியர் பெற்ற சான்றிதழ்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். எனவே, ஒருமை பல்கலைக்கழகம் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்பட அனுமதிக்க வேண்டும். புதிய பல்கலைக்கழகத்திற்கு அண்ணா இணைப்பு பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்ட வேண்டும். அதற்கேற்ற வகையில் புதிய சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.