கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

யூரியா இறக்குமதியை அதிகரிக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சென்னை,

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் தொடங்கியது முதலே, இந்தியாவில் யூரியா உரத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் எல்.என்.ஜி. கேஸ் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், நாட்டில் உள்ள சில உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஆண்டு பராமரிப்பை முன்கூட்டியே தொடங்கிவிட்டன. இவ்வாறு, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால், பெரிய அளவில் விவசாயம் நடைபெறாது என்பதால், யூரியா உரத் தேவை குறைவாகவே இருக்கும் என்றாலும், ஜூன் மாதம் கரீப் பருவம் தொடங்கும்போது, தேவை அதிகரிக்கும் என்பதால், அந்த நேரத்தில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தியா நடவடிக்கை

யூரியா உரத்தை பொறுத்தவரை, உலக அளவில் இந்தியாதான் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் அதிகமாக யூரியா இறக்குமதி நடக்கிறது. தற்போது, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கூடுதலாக யூரியா உரத்தை அனுப்ப இந்தியா கோரிவருகிறது. ஆனால், சீனா தரப்பில் இருந்து இன்னும் பதில் வராததால், ரஷியா, இந்தோனேசியா, மொராக்கோ, பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து யூரியா இறக்குமதியை அதிகரிக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் தற்போதைய நிலையில், உரம் கையிருப்பு கடந்த ஆண்டைவிட கூடுதலாக 36.60 சதவீதம் உள்ளது என்றாலும், உள்நாட்டு உற்பத்தி குறைவு, இறக்குமதியில் பிரச்சினை போன்ற சிக்கல்கள் இருப்பதால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஒரு மாதம்தான் சமாளிக்க முடியும்

இந்தியாவில் இதுவரை யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் போன்ற உரங்கள் 180.12 லட்சம் டன் கையிருப்பில் உள்ளது. இதில், யூரியா கையிருப்பு மட்டும் 61.51 லட்சம் டன் ஆகும். போதுமான உரம் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தாலும், இதை வைத்து ஒரு மாதம்தான் சமாளிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் இப்போதே கோவை, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டுறவு சங்கங்களில் போதிய யூரியா இருப்பு உள்ளது என்றும், மத்திய அரசு ஒதுக்கீட்டில் இருந்தும் முறையாக வந்து கொண்டிருப்பதாகவும், யூரியா தட்டுப்பாட்டை உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும் வேளாண்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Also read:பாகிஸ்தானின் கராச்சியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை - 19 பேர் உயிரிழப்பு