பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம், கம்பன் நகரை சேர்ந்தவர் வைத்தியலிங்கம். பால் வியாபாரி. இவரது வீட்டின் அருகே ஹாலோ பிளாக் கல்லால் கட்டப்பட்ட பழமையான மாட்டு கொட்டகை ஒன்று உள்ளது.
இந்த கொட்டகையின் வெளிப்புறம் நேற்று மாலை வைத்தியலிங்கத்தின் மனைவி ராமாயி (வயது 44), ராமாயியின் தாய் பூவாயி (70), வைத்தியலிங்கத்தின் அண்ணன் கலியபெருமாள் மனைவி கற்பகம் (55) ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மாட்டு கொட்டகையின் சுவர் திடீரென்று இடிந்து அவர்கள் 3 பேர் மீதும் விழுந்தது.
இதில், சுவரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மண் சரிந்து 2 பெண்கள் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜப்பா மனைவி லட்சுமி (வயது 26), முனிராஜ் மனைவி ராதாம்மா (28), முத்தப்பா மனைவி உமா (23), கிருஷ்ணப்பா மனைவி விமலம்மா (55). இவர்கள் 4 பேரும் சாமநத்தம் அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில், கோலம் போடுவதற்காக சுண்ணாம்பு கல்லை எடுப்பது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் 4 பேரும் சுண்ணாம்பு கல் எடுக்க சென்றனர். அங்கு தோண்டப்பட்டிருந்த குழியில் இறங்கி அவர்கள் சுண்ணாம்பு கல்லை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது.
இதில் லட்சுமி, ராதாம்மா ஆகியோர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். உமா, விமலம்மா ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.