தமிழக செய்திகள்

இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் இடமாற்றம்: போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை

போலீஸ் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை ஒப்படைப்பதில் நடந்த குளறுபடி தொடர்பாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

குழித்துறை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த சமயத்தில், ஊரடங்கை மீறி செல்வோரின் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்படி மார்த்தாண்டம் பகுதியிலும் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சென்றதாக மொத்தம் 284 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை கணக்கெடுத்து அந்தந்த வாகன உரிமையாளர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து ஒப்படைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதைதொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் 3 போலீசார் வாகனங்களை கணக்கெடுத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி 151 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே வாகனங்கள் வழங்கியதில் குளறுபடி நடந்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனுக்கு அவர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசந்திரன், இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினார். அப்போது, அதில் 8 இருசக்கர வாகனங்கள் அதற்குரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக வேறு நபர்களுக்கு வழங்கியது தெரிய வந்தது.

பின்னர், இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அதிரடியாக நடவடிக்கை எடுத்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், ஏட்டு சுனில்குமார், போலீஸ்காரர் விக்டர் உள்பட 5 பேரை நாகர்கோவில் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும், போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குமரி மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்