சென்னை,
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், மூன்றாம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசில் அங்கம் வகிக்கும் லாரி உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் 20-ந் தேதி முதல் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். லாரி உரிமையாளர்களின் போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. பஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசம், டெல்லி, மராட்டியம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு சரக்கு ஏற்றி வந்த லாரிகள் சென்னையை அடுத்த மாதவரம் மற்றும் மஞ்சம்பாக்கம் லாரிகள் நிறுத்தும் பணிமனை உள்பட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களை சேர்ந்த பெரும்பாலான லாரி டிரைவர்கள், கிளனர்கள் லாரியிலேயே சிறிய அளவிலான கியாஸ் அடுப்புகளை வைத்து சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பின் முன்னாள் தலைவரும், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் பொதுச்செயலாளருமான சண்முகப்பா கூறியதாவது:-
லாரிகள் வேலை நிறுத்தத்தின் காரணமாக நாடு முழுவதும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இதில் சிமெண்டு, செங்கல், ஜல்லி, இரும்பு கம்பி, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் அடங்கும்.
நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம். மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக அழைத்து பேசி உரிய தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலை மின்வாரியம் அலுவலகம் அருகில் உள்ள காயிதே மில்லத் நினைவு மண்டபம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் குறைவாகவே வந்தன. இதனால் காய்கறி விலை அதிக அளவில் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறுகையில், ஏராளமான லாரிகள் தற்போது மாற்றுப்பாதைகளில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொண்டு வருகின்றன. இதனால் லாரிகளுக்கு அதிக வாடகை கொடுக்க வேண்டியது உள்ளது. எனவே காய்கறி விலை அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது என்றார்.
கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஏ.டான்போஸ்கோ கூறும்போது, மைசூரு, பொள்ளாச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டையில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் சராசரியாக 40 லோடு (ஒரு லோடு என்பது 10 டன்) வரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. தற்போது 5 லோடு வருவதே பெரும் பிரச்சினையாக வருகிறது. இதனால் தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. எனவே தேங்காய் ஏற்றி வரும் லாரிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம் என தெரிவித்தார்.
கோயம்பேடு அண்ணா கனி அங்காடி வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.சீனிவாசன் கூறுகையில், ஆடி மாதம் என்பதால் தற்போது வியாபாரம் மந்தமாக இருக்கிறது. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக வரத்து குறைந்திருந்தாலும், அது எத்தகைய தாக்கத்தையும் பழ வியாபாரத்தில் ஏற்படுத்தவில்லை என்றார்.
பூ வியாபாரிகள் கூறும்போது, லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு பூக்கள் அதிகாலை 4 மணிக்கு மேல் தான் கிடைக்கிறது. குறிப்பாக ரோஜா, மல்லி, கேந்தி உள்ளிட்ட பல்வேறு பூக்களை வாங்க நள்ளிரவே வரும் மொத்த வியாபாரிகள் மற்றும் 2-ம் தர வியாபாரிகள் ஏமாற்றம் அடைகின்றனர். வேலைநிறுத்த வேளையில் சரக்கு ஏற்றி வரும் டிரைவர்களுக்கு கூடுதல் வாடகை தரவேண்டி உள்ளதால், பூக்கள் விலை சற்று உயர்ந்து இருக்கிறது என்றனர்.