தமிழக செய்திகள்

3-வது அலைக்காக காத்திருக்காமல் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்; பொதுமக்களுக்கு, டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

‘‘கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வமின்றி இருக்கின்றனர். எனவே 3-வது அலைக்காக காத்திருக்காமல் உடனடியாக மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’, என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

ஆய்வு

தமிழகம் முழுவதும் 5 மாதங்களுக்கு பிறகு அரசு மருத்துவக்கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாதிப்பு நிறைந்த பகுதிகள்

கொரோனாவை பொறுத்தவரை கடந்த 2 வாரங்களாக ஏறக்குறைய 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலேயே தினசரி பாதிப்பு இருந்து கொண்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் சுகாதாரத்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது.அதேபோல கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் சவால் நிறைந்த மாவட்டங்களாக இருக்கின்றன. 32 மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே இருக்கிறது. சில மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் நோய்த்தொற்று உறுதி செய்யும் தரவு 1.2 சதவீதமாக இருக்கிறது. ஆனால் கோவை, தஞ்சை, அரியலூர், ஈரோடு உள்பட 18 மாவட்டங்களில் மாநில சராசரியை விட அதிகம் காணப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி

மராட்டியத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கம் தொடங்கியுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்துகொண்டு வருகிறது. எனவே மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்க அறிவுறுத்தி இருக்கிறோம்.தமிழகத்தில் ஏப்ரல் மாதத்துக்கு முன்பு வரை தடுப்பூசி செலுத்துதல் மீதான விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. தற்போது 1.97 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசியை 47 லட்சம் பேர் மட்டுமே போட்டுள்ளனர். எனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை கண்டறிந்து 2-ம் தவணையில் ஈடுபடுத்திட உரிய அறிவுரைகள் தரப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் மீண்டும் ஒரு அலைக்காக காத்திருக்க கூடாது.

தட்டுப்பாடு இல்லை

வரும் நாட்கள் எப்படி இருக்கப் போகிறது? மருந்து சப்ளை எப்படி இருக்கும்? என்று தெரியாது. எனவே நேரம் கிடைக்கும்போதே மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள சூழலில் தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதம். எனவே தடுப்பூசி செலுத்தாதவர்களை கணக்கிட்டு வருகிறோம். தடுப்பூசிக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இப்போதுவரை 12 லட்சத்து 61 ஆயிரத்து 691 தடுப்பூசிகள் நம்மிடம் கையிருப்பாக உள்ளது. எனவே இதை தட்டுப்பாடு என்று சொல்லமுடியாது.

கடைவீதிகளில் குவியக்கூடாது

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது பயத்தாலும், ஆர்வத்தாலும் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டினார்கள். தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வமின்றி இருக்கின்றனர். சிறிது நேரம் கழித்து செல்லலாமே... என்ற எண்ணம் மக்களுக்கு வந்துள்ளது. அது கூடாது. ஒட்டுமொத்தமாக 2.7 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி பேருக்கு இன்னும் தடுப்பூசி போடவேண்டியதுள்ளது. அப்படி பார்க்கும்போது தடுப்பூசி போடுவது என்பது நமக்கு கிடைக்கும் நல்லதொரு வாய்ப்பு. இதன்மூலம் நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் பாதுகாக்க முடியும். அடுத்த அலையை ஒத்திவைத்துக்கொண்டே செல்லலாம். 2 வாரத்துக்கு முன்பு பாதிப்பு அதிகரித்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க நிறைய நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருத்தருக்கு பாதிப்பு இருந்தாலும், கூட்டத்தில் செல்லும்போது அது பலருக்கு நோய் பரவ வாய்ப்பாகி விடுகிறது. மக்களும் இதுதான் வாய்ப்பு என தளர்வுகளை பயன்படுத்தி கடைவீதிகளில் குவியக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ஜெயந்தி உடனிருந்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது