தமிழக செய்திகள்

நினைவு இல்லமாகும் வேதா நிலையம்: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் வேதா நிலையத்தில் நேற்று அதிகரிகள் குழு ஆய்வு செய்தனர்.

சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார்.

சட்டசபையிலும் இதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக ரூ.68 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகையையும் அரசு கோர்ட்டில் செலுத்தியது.

இந்தநிலையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர் தலைமையில் தென்சென்னை வருவாய்த்துறை கோட்டாட்சியர் உள்பட அதிகாரிகள் போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்துக்கு நேற்று வந்தனர். வேதா நிலையத்தின் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதில் உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தனர். சில மணி நேர ஆய்வுக்கு பின்னர் அதிகாரிகள் குழு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

வேதா நிலையத்தில் அதிகாரிகள் குழு தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு இருக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு