சென்னை,
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில், 4 முனைப்போட்டி நிலவும் நிலை உள்ளது. தே.மு.தி.க., ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. (ராமதாஸ் அணி), புதிய தமிழகம் உள்ளிட்டவை இன்னும் கூட்டணியை முடிவு செய்து அறிவிக்கவில்லை.
இதில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இயங்கி வரும் தே.மு.தி.க.. ஆளுங்கட்சியான தி.மு.க.வுடனும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடனும் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வந்த நிலையில், இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், கூட்டணி விவகாரம் தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது;
”தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். பேசுவது, பழகுவது வேறு, அரசியலில் சேர்வது வேறு. இது எங்க கட்சி, எப்போ முடிவு எடுக்க வேண்டுமோ அப்பொழுது எடுத்து சொல்வோம். யாருடைய அவசரத்துக்கும் சொல்ல முடியாது எங்களுக்கு உரிய மரியாதை, எங்களுக்கு உரிய நியாயம் எங்கு கிடைக்கிறதோ அங்குதான் கூட்டணி.”
இவ்வாறு அவர் கூறினார்.